Wednesday, December 19, 2012

வலைப்பூக்களில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுச் செய்திகள் - வெற்றிபெற்றது கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு


வெற்றிபெற்றது கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு
ஞாயிறு காலை தொடங்கிய கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு தொடங்கிய நிலையிலேயே, அரசுச் செயலாளர் உட்பட, பல அரசுதரப்பு அதிகாரிகள் மேடையில் காட்சி அளித்தும், முதல் வரிசையில் அமர்ந்திருந்ததையும் காண முடிந்தது. அதுவே மாநாட்டின் வெற்றியைப் பறை சாற்றுவதாக அமைந்தது. அதையும் தாண்டி, தமிழ் அறிஞர்கள் பலர் குறிப்பாக "பல்கலைக்கழக தமிழ் ஆய்வாளர்களும், மாணவர்களும்" கலந்துகொண்டது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. .மொழியியல் அறிஞரும், முன்னாள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் தலைவருமான ந.தெய்வசுந்தரம் தலைமையில் மாநாடு தொடங்கியது.கண்ணன் "மதிநிறைந்த நன்னாளில்" என்று தொடங்கினார். அன்று மார்கழி முதல் நாள். மார்கழி மாதம் எப்படி ஓசோன் என்ற 'பிராணவாயு மண்டலத்தை"வலுப்படுத்தும் தன்மையைக் கொண்டதோ, அந்த மண்டலம் வலுப்பெறும் பாணியில் "கணினித் தமிழும் வலுப்பெறும்" என்று இந்த மாநாடு கட்டியம் கூறியதோ?
 
தெய்வசுந்தரம் தனது வரவேற்புரையில் "பல கணினி வழி தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களையும்" சுட்டிக்காட்டத் தவறவில்லை. அடுத்துப் பேசிய "தமிழ் வளர்ச்சித் துறை / அறநிலையத் துறை / செய்தித் துறை ஆகியவற்றின் அரசு செயலாளர் திரு. ராசாராம் பேசத் தொடங்கினார். தொடக்கத்திலேயே, "இந்த மாநாட்டின் கதாநாயகனான தெய்வசுந்தரம் அவர்களே" என்று விளித்து ஆரம்பித்தது, சிறப்பாக இருந்தது. தமிழ் அறிஞர்களுக்கு இப்படி ஒரு சிறப்பைக் கொடுக்கும் அளவில் அரசுச் செயலாளர் உரையாற்றுகிறாரே? என்ற எண்ணம் அண்மைக்கு வந்தது. அப்படியானால் அவர் கூறியதுபோல தமிழக முதல்வர் உடனடியாக "கணினித் தமிழ் வளர்ச்சிக்கு" ஒரு தொகையை ஒதுக்கி, தமிழ் வளர்ச்சிக்கு உண்மையாகவே உதவுவார் போன்ற தோற்றம் வந்தது. அதுவே மாநாடு முழுவதும் நமக்கு வரும் அளவில், அரசுத் தரப்பு பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பேசியது ஆறுதலாக இருந்தது.
 
அடுத்து அருள் நடராசன் பேச வந்தார். அவர் தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு துறையின் இயக்குனர். அவர் "தான் தெய்வசுந்தரத்தின் மாணவர் என்றும், தங்களுக்கு உலக மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியை அறிமுகம் செய்தவரே பேராசிரியர் தெய்வசுந்தரம் என்றும் கூறினார். அதேபோல அவரது முயற்சியில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று தருவோம் என்று உறுதி கூறினார்.
 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை பேசினார். அவர் மதுரைப் பல்கலையில் இருக்கும் போது, பேராசிரியர் தெய்வசுந்தரத்தை அழைத்து, ஆர்வமிகு பேச்சு ஒன்றை அமைத்ததாகவும், அதேபோல எப்போதும் அவர் மீது பெரும் பற்று கொண்டிருப்பதாகவும், அது தெய்வசுந்தரத்திற்கே தெரியாது என்றும் கூறி வியக்க வைத்தார். அதேபோல தான் மேடையிலேயே அரசு செயலாளரிடம், பேராசிரியர் தெய்வசுந்தரம் இப்போது ஒய்வு பெற்று இருப்பதால், நாம் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு அரசுச் செயலாளர் ராசாராம் "என்ன செய்யவேண்டும். சொல்லுங்கள்" என்று கேட்டதாகவும் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் அவரைக் கவுரவப் பேராசிரியாக நியமிக்க வேண்டும் என்று கூறியதாகவும், அவரும், செய்யுங்கள் என்று ஒப்புதல் கொடுத்ததாகவும் கூறி, கைதட்டலைப் பெற்றார்.
 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கருணாகரன் பேசினார். அவர் தமிழின் கணினி வளர்ச்சி என்றால் என்ன என்பதை எளிமையாக ஆதாரங்களுடன் விளக்கம் தந்தார். அன்றைய காலை அமர்வு நிறைவுற்றது.
 
"மின்னணுக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு" என்ற தலைப்பில் அடுத்த அமர்வு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கியது. அதில் ராம்கி அய்யா தலைமை ஏற்று, இப்போது இருக்கும் இழி நிலையில், தமிழ் தமிழ்நாட்டில் பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும், ஊடக மொழியிலும், வழக்காடு மன்றத்திலும், பித்ரு மொழி நிலையிலும், இல்லாமல் இருப்பதை வேதனையுடன் எடுத்துச் சொன்னார். மெல்ல, மெல்லச் சாகும் நிலையில் தமிழ் இருப்பதை எடுத்துக் கூறினார். தமிழ் அறுதியியல் வல்லுனர் நாக.இளங்கோ அடுத்துப் பேசினார். அவரும் தமிழ்க் கணினியியல், இணையத்தில் முன்னேறி இருப்பதாகக் கூறப்படுவது ஒரு "மாயையே" என்று விளக்கினார். தேனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெச்வின் பிரசிடா பேசினார். அவரும் தமிழ் இன்று இருக்கும் வளரா நிலையைச் சுட்டிக் காட்டினார். எப்படி கிராமப்புறங்களில், இணையமே எட்டாக்கனியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். அடுத்துப் பேசிய ராஜ்குமார் பழனிச்சாமி, சில செய்திகளைக் கூறி பார்வையாளர்களை உசுப்பிவிட்டார். தொடர்வண்டித் துறையில் நடுவண் அரசு "பயணச்சீட்டிலும், வண்டியில் ஒட்டும் பயணிகள் பட்டியலிலும்" தமிழில் எழுதாமல் இருப்பது தமிழ் மட்டுமே தெரிந்த ஏழை மக்களுக்குப் பெரும் துன்பமாக இருக்கிறது என்றார். கடைகளில் கொடுக்கும் " பொருள் விலை சீட்டுகளில்" தமிழ் இல்லை என்ற குறையைத் தமிழனின் குறை என்றார்.
 
புதுச்சேரி ஊடகவியலாளர் சுகுமாரன் பேசினார். அவரும் தமிழின் பயன்பாடு எந்த அளவில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதை எடுத்துச் சொன்னார். அடுத்து பேசிய தெ.சீ.சு.மணி, இந்த கணினித்தமிழ் என்பதைக் கற்காதவர்கள், இன்றைய உயர் தொழில்நுட்பக்காலத்தின் "எழுத்தறிவற்றவர்கள்" போல ஆகி விடுகின்றனர் என்றார். இந்த மாநாடு வெறும் தமிழ் வளர்ச்சி மட்டுமல்ல என்றும், கணினி இந்தியின் அடக்குமுறை எல்லா இந்திய மொழிகள் மீதும் இருக்கிறது என்றும், இந்த மாநாட்டின் மூலம் தமிழ் அதை எதிர்ப்பதற்கான முதல் குரலை எழுப்பியுள்ளது என்றும், நாம் எல்லா இந்திய மொழிகளின் ஒற்றுமையைக் கட்டி கணினி இந்தி நம்மை அடக்க முயல்வதை எதிர்த்த போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றும் கூறினார். அதனால் இது அடுத்த கட்ட இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரின் பரிணாம வளர்ச்சி என்றார். மொழியை இனத்தை விட்டுப் பிரித்துப் பார்க்க முடியாது என்றும், அதனால் நான்காம் வன்னிப் போருக்கு பின்னால், தமிழ்நாட்டில் எழுந்துள்ள இன உணர்ச்சியைப் பயன்படுத்தி, "தம்" பிடித்து, தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்கப் பேராசிரியர் மா.பூங்குன்றன் கணினித் தமிழின் இன்றைய நிலையையும், நாம் செய்யவேண்டிய வேலைகளையும் பட்டியலிட்டார்.
 
அந்த அமர்வில் பேசவேண்டிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பேராசிரியர் அரணமுறுவல் அடுத்த அமர்வில் தனது கருத்துக்களை ஆவேசமாகப் பதிவு செய்தார். இரண்டாம் அமர்வு கணினித்தமிழ் வளர்ச்சித் திட்டம் என்ற தலைப்பில் நடந்தது. அதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ தலைமை தாங்கினார். குறிப்பான திட்டங்களை முன்வையுங்கள் எனப் பேச்சாளர்களைக் கேட்டுக் கொண்டார். சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வ.நாகராசன் இணையம் மூலம் ஒரு வகுப்பே எடுத்தார். அண்ணா பல்கலையின் முன்னாள் பேராசிரியர் வி.கிருஷ்ணமூர்த்தி, கனடாவின் வாட்டர்லூ பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.இரா.செல்வகுமார், அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் மா.கணேசன், மலாய் பல்கலைக் கழகப் பேராசிரியர் சோ.சுப்பிரமணி, மதுரைப் பல்கலைப் பேராசிரியர் உமாராஜ், புதுவை காஞ்சி மாமுனிவர் ஆய்வுமையம் பேராசிரியர் நா.இளங்கோ ஆகியோர் உரையாற்றினர்.
 
நிறைவு விழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனர் முனைவர் கா.மு.சேகர், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன், ஆகியோர் தமிழ்நாடு அரசு விரைவில் இந்த மாநாட்டின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அமுல் படுத்தும் என்று உறுதி கூறினார். அது ஒரு ஆறுதலாக இருந்தது. உத்தமம் செயலாளர் எ.இளங்கோவன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ராசேந்திரன்,கணித்தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு.சீனிவாஸ் பார்த்தசாரதி ஆகியோரும் உரையாற்ற, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் முனைவர் மு.கண்ணன் நன்றி கூறி இனிதே முடித்தார்.
 

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India