Tuesday, December 18, 2012

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு
சென்னை
தமிழகத்தில் தமிழ் ஆர்வலர்கள் திட்டமிட்டபடி , கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு டிசம்பர் 16 (2012) ஞாயிறு அன்று சென்னை லயோலாக் கல்லூரியில் கல்வியியல் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணிமுதல் மாலை 7 மணி வரை மாநாடு நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்றனர்.  
காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது . தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, மாநாட்டுக் குழுவின் ஒன்றிணைப்பாளர் பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டின் நோக்கம்பற்றியும் விளக்கினார். பின்னர் தமிழக அரசுச் செயலர் ( தமிழ் வளர்ச்சி – அறநிலையங்கள் – செய்தித்துறைகள் )  முனைவர் மூ. இராசாராம் அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கினார். விரைவில் தமிழ்க் கணினிமொழியியல் தொடர்பான படிப்புகளையும் ஆய்வுகளையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், மதுரையில் தொடங்கவிருக்கிற உலகத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார். வரும் 12 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் கூறினார். பின்னர் உரையாற்றிய தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ம. திருமலை அவர்கள் இன்றைய கணினி யுகத்தில் கணினித்தமிழ் வளர்ச்சியானது தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதைத் தெளிவுபடுத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் அவர்கள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு மொழியியல் அடிப்படையிலான தமிழ்மொழி ஆய்வின் அவசியத்தை எடுத்துக்கூறினார். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியர் கி. கருணாகரன் அவர்கள் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி , மையக்கருத்துரை வழங்கினார்.  
அடுத்து, தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, முதல் அமர்வு தொடங்கியது. தமிழ் ஆய்வாளர் முனைவர் இராமகி அவர்கள் அமர்வுக்குத் தலைமை வகித்தார். முதலில் அவர் இன்று கணினித்தமிழ் வளர்ச்சிக்கு மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகளை மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறினார். பின்னர் மின்னணுக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடுகள் விரிவடையவேண்டும் என்ற நோக்கில் திரு. நாக . இளங்கோவன், திரு. இரா. சுகுமாரன், திருமதி. ஜேஸ்லின் பிரசில்டா, திரு. இராஜ்குமார் பழனிச்சாமி, திரு. மா. பூங்குன்றன், திரு. தெ.சீ.சு. மணி உரையாற்றினார்கள்.
பகல் 1.30 மணியிலிருந்து 2 மணிவரை மதிய உணவு விருந்து நடைபெற்றது.
மீண்டும் 2 மணிக்கு இரண்டாவது அமர்வு தொடங்கியது. கணினித்தமிழ் வளர்ச்சித் திட்டம் வகுக்கும் அமர்வாக இது அமைந்தது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மு. பொன்னவைக்கோ அவர்கள் தலைமைவகித்தார். அவரது உரையைத் தொடர்ந்து பேராசிரியர்கள் முனைவர். ப.அர. நக்கீரன், முனைவர். சி.இரா.செல்வக்குமார், முனைவர். வ. நாகராசன், முனைவர் மா. கணேசன், முனைவர் சி. சுப்பிரமணி, முனைவர் வி. கிருட்டிணமூர்த்தி, முனைவர் நா. இளங்கோ, முனைவர் க.உமாராசு, முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, 4.30 மணிக்கு மாநாட்டின் நிறைவுவிழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்கள் தலைமைவகித்தார். பேராசிரியர் . ந. தெய்வ சுந்தரம் மாநாட்டின் இரண்டு அமர்வுகளிலும் கலந்துரையாடப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறினார். உத்தமத்தின் செயலர் திரு. அ. இளங்கோவன் , கணித்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி , பேராசிரியர். இல. இராமமூர்த்தி , உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் ஆகியோர் உரையாற்றினர். அதைத் தொடர்ந்து முனைவர் கா.மு. சேகர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்ககம் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை விளக்கிக் கூறினார். முனைவர் மு. கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.  நாட்டுப் பண்ணுடன் மாநாடு இனிதே நிறைவுபெற்றது.     
மாநாட்டின் அமர்வுகளில் பின்கண்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.
1. இன்றைய மின்னணுக் கருவிகளின் உலகில் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழ்மொழி இடம்பெறவேண்டும். இதுவே இன்றைய தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.
2. தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் – செல்பேசி முதல் கணினிவரை – தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வரவேண்டும்.
3. மின்னணுக் கருவிகளில் தமிழ் இடம் பெறுவதற்குத் தேவையான தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
4. தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையான தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில்நுட்ப ஆய்வுகள் , படிப்புகள் தமிழகத்தின் உயர்கல்வி நிலையங்களில் தொடங்கப்படவேண்டும. இதுவே கணினித் தமிழ் வளர்ச்சிகான மனிதவளத்தை உருவாக்கும்.
5. மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த,   தமிழக அரசும்  , தமிழ் வளர்ச்சித் துறையும் உதவிடவேண்டும்.
6. மின்தமிழ் வளர்ச்சிக்கான ஒரு தெளிவான திட்டத்தைத் தமிழக அரசு மேற்கொண்டு, தமிழின் வளர்ச்சியை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். இதற்கு தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஒத்துழைக்கவேண்டும்.

மேற்கூறிய கருத்துகள்பற்றி மக்களிடையே  விழிப்புணர்வை உருவாக்கவும், மின்தமிழ் வளர்ச்சிக்கான தமிழக அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்கவும் தமிழ் ஆர்வலர்களைக்கொண்டு கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவை ஒன்றை நிறுவிச் செயல்பட மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் விரும்பியதையொட்டி, மாநாட்டில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையின் தொடக்கம் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர் கட்டணம் ரூபாய் பத்து என்று அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் அங்கேயே உறுப்பினராகத் தங்களைப் பதிவுசெய்து கொண்டனர். விரைவில் பேரவை பதிவு செய்யப்படும், பேரவையின் நடவடிக்கைகளைத் அனைத்துப் பகுதிகளிலும் விரிவாக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான இணையதளம், செய்தி மடல் ஆகியவை விரைவில் தொடங்கப் பெறும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து, மின்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை இப்பேரவை மேற்கொள்ளும். 
மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் மின்னணுத் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒரு தெளிவான திட்டத்தை விரைவில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையானது தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலரிடம் அளிக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் இணைந்து , செயலாற்ற விரும்புவர்கள் பின்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்
எஸ் 4, எம் டி எஸ் அடுக்ககம்
எண் 5, 3 ஆம் குறுக்குத் தெரு
சாஸ்திரி நகர், அடையாறு
சென்னை 600020
அலைபேசி : 9789059414

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India