Tuesday, December 18, 2012

கணினித்தமிழ் மாநாடு - சில புகைப்படப் பதிவுகள்

மேலும் புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும் -
http://www.newsalai.com/details/conference-held-at-chennai-to-make-tamil-as-effective-e-language.html
மாநாட்டுக் கூட்டத்தின் ஒரு பகுதி

அறிஞர் பெருமக்கள்
 
தமிழக அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம்  அவர்களின் பேட்டி


உயர்திரு. ராஜாராம் அவர்களுக்குப் பொன்னாடை அணிவிக்கும் பேரா.தெய்வசுந்தரம்
                                         

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு
சென்னை
தமிழகத்தில் தமிழ் ஆர்வலர்கள் திட்டமிட்டபடி , கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு டிசம்பர் 16 (2012) ஞாயிறு அன்று சென்னை லயோலாக் கல்லூரியில் கல்வியியல் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணிமுதல் மாலை 7 மணி வரை மாநாடு நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்றனர்.  
காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது . தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, மாநாட்டுக் குழுவின் ஒன்றிணைப்பாளர் பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டின் நோக்கம்பற்றியும் விளக்கினார். பின்னர் தமிழக அரசுச் செயலர் ( தமிழ் வளர்ச்சி – அறநிலையங்கள் – செய்தித்துறைகள் )  முனைவர் மூ. இராசாராம் அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கினார். விரைவில் தமிழ்க் கணினிமொழியியல் தொடர்பான படிப்புகளையும் ஆய்வுகளையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், மதுரையில் தொடங்கவிருக்கிற உலகத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார். வரும் 12 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் கூறினார். பின்னர் உரையாற்றிய தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ம. திருமலை அவர்கள் இன்றைய கணினி யுகத்தில் கணினித்தமிழ் வளர்ச்சியானது தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதைத் தெளிவுபடுத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் அவர்கள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு மொழியியல் அடிப்படையிலான தமிழ்மொழி ஆய்வின் அவசியத்தை எடுத்துக்கூறினார். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியர் கி. கருணாகரன் அவர்கள் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி , மையக்கருத்துரை வழங்கினார்.  
அடுத்து, தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, முதல் அமர்வு தொடங்கியது. தமிழ் ஆய்வாளர் முனைவர் இராமகி அவர்கள் அமர்வுக்குத் தலைமை வகித்தார். முதலில் அவர் இன்று கணினித்தமிழ் வளர்ச்சிக்கு மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகளை மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறினார். பின்னர் மின்னணுக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடுகள் விரிவடையவேண்டும் என்ற நோக்கில் திரு. நாக . இளங்கோவன், திரு. இரா. சுகுமாரன், திருமதி. ஜேஸ்லின் பிரசில்டா, திரு. இராஜ்குமார் பழனிச்சாமி, திரு. மா. பூங்குன்றன், திரு. தெ.சீ.சு. மணி உரையாற்றினார்கள்.
பகல் 1.30 மணியிலிருந்து 2 மணிவரை மதிய உணவு விருந்து நடைபெற்றது.
மீண்டும் 2 மணிக்கு இரண்டாவது அமர்வு தொடங்கியது. கணினித்தமிழ் வளர்ச்சித் திட்டம் வகுக்கும் அமர்வாக இது அமைந்தது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மு. பொன்னவைக்கோ அவர்கள் தலைமைவகித்தார். அவரது உரையைத் தொடர்ந்து பேராசிரியர்கள் முனைவர். ப.அர. நக்கீரன், முனைவர். சி.இரா.செல்வக்குமார், முனைவர். வ. நாகராசன், முனைவர் மா. கணேசன், முனைவர் சி. சுப்பிரமணி, முனைவர் வி. கிருட்டிணமூர்த்தி, முனைவர் நா. இளங்கோ, முனைவர் க.உமாராசு, முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, 4.30 மணிக்கு மாநாட்டின் நிறைவுவிழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்கள் தலைமைவகித்தார். பேராசிரியர் . ந. தெய்வ சுந்தரம் மாநாட்டின் இரண்டு அமர்வுகளிலும் கலந்துரையாடப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறினார். உத்தமத்தின் செயலர் திரு. அ. இளங்கோவன் , கணித்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி , பேராசிரியர். இல. இராமமூர்த்தி , உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் ஆகியோர் உரையாற்றினர். அதைத் தொடர்ந்து முனைவர் கா.மு. சேகர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்ககம் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை விளக்கிக் கூறினார். முனைவர் மு. கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.  நாட்டுப் பண்ணுடன் மாநாடு இனிதே நிறைவுபெற்றது.     
மாநாட்டின் அமர்வுகளில் பின்கண்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.
1. இன்றைய மின்னணுக் கருவிகளின் உலகில் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழ்மொழி இடம்பெறவேண்டும். இதுவே இன்றைய தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.
2. தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் – செல்பேசி முதல் கணினிவரை – தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வரவேண்டும்.
3. மின்னணுக் கருவிகளில் தமிழ் இடம் பெறுவதற்குத் தேவையான தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
4. தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையான தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில்நுட்ப ஆய்வுகள் , படிப்புகள் தமிழகத்தின் உயர்கல்வி நிலையங்களில் தொடங்கப்படவேண்டும. இதுவே கணினித் தமிழ் வளர்ச்சிகான மனிதவளத்தை உருவாக்கும்.
5. மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த,   தமிழக அரசும்  , தமிழ் வளர்ச்சித் துறையும் உதவிடவேண்டும்.
6. மின்தமிழ் வளர்ச்சிக்கான ஒரு தெளிவான திட்டத்தைத் தமிழக அரசு மேற்கொண்டு, தமிழின் வளர்ச்சியை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். இதற்கு தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஒத்துழைக்கவேண்டும்.

மேற்கூறிய கருத்துகள்பற்றி மக்களிடையே  விழிப்புணர்வை உருவாக்கவும், மின்தமிழ் வளர்ச்சிக்கான தமிழக அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்கவும் தமிழ் ஆர்வலர்களைக்கொண்டு கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவை ஒன்றை நிறுவிச் செயல்பட மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் விரும்பியதையொட்டி, மாநாட்டில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையின் தொடக்கம் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர் கட்டணம் ரூபாய் பத்து என்று அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் அங்கேயே உறுப்பினராகத் தங்களைப் பதிவுசெய்து கொண்டனர். விரைவில் பேரவை பதிவு செய்யப்படும், பேரவையின் நடவடிக்கைகளைத் அனைத்துப் பகுதிகளிலும் விரிவாக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான இணையதளம், செய்தி மடல் ஆகியவை விரைவில் தொடங்கப் பெறும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து, மின்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை இப்பேரவை மேற்கொள்ளும். 
மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் மின்னணுத் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒரு தெளிவான திட்டத்தை விரைவில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையானது தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலரிடம் அளிக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் இணைந்து , செயலாற்ற விரும்புவர்கள் பின்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்
எஸ் 4, எம் டி எஸ் அடுக்ககம்
எண் 5, 3 ஆம் குறுக்குத் தெரு
சாஸ்திரி நகர், அடையாறு
சென்னை 600020
அலைபேசி : 9789059414

Thursday, October 18, 2012

தினகரன்

தினகரனில் வெளியான செய்தி


Tuesday, October 9, 2012

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு


கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

( 2012 டிசம்பர் 15 )

 

அன்புடையீர்,

வணக்கம். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் நமது பல்வேறு பணிகளில் கணினியின் பங்களிப்பு அளப்பரியது என்பதில் ஐயமில்லை. நமது அன்றாடப் பணிமுதல் ஆய்வுத்திட்டப் பணிவரை அனைத்துமே கணினிவழியே மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளையெல்லாம் மேற்கொள்வதற்கு ஒரு மொழி தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வதும் வளர்த்துக்கொள்வதும் மிகவும் இன்றியமையாததாகும். அவ்வாறு தன்னை வளர்த்துக்கொள்ளாத மொழிகள், ஆதிக்கமொழிகளால் அழிவுக்குத் தள்ளப்படும். அம் மொழிகளைப் பேசும் இனங்களும் அவ்வினங்களின் பண்பாடுகளும் சீரழிவுக்கு உட்படும்.

 
மூண்டெழும் மொழிப்போர்
 

இந்தியாவில் இந்திமொழிமட்டுமே நடுவண் அரசின் ஆட்சிமொழி. தமிழ் உட்பட பிறமொழிகளுக்கு அத்தகுதி அளிக்கப்படவில்லை. தமிழ்மொழி தமிழ்நாட்டரசின் மாநில ஆட்சிமொழியாக மட்டுமே நீடிக்கிறது. இந்நிலையில் அனைத்து மொழிகளும் நடுவண் அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும் என்ற குரல் பல மாநிலங்களிலும் ஒலித்துவருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து இதற்கான பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன என்பது வரலாறு.


இந்தி மட்டும்தான் இந்தியாவின் மொழியா?
 

ஆட்சிமொழித் தகுதி பெற்றுள்ள இந்திமொழியை அனைத்துவகைகளிலும் வளர்த்தெடுக்கப் பல கோடி நிதி செலவழிக்கப்படுகிறது. குறிப்பாகக் கணினிவழி இந்திப் பயன்பாட்டைப் பெருக்குவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்திமொழியை மட்டுமே ஆட்சிமொழியாக அனைத்து மொழியினரும் ஏற்றுக்கொள்வதற்காகவும், இந்திமொழி வாயிலாக மட்டுமே அனைத்து மொழிகளும் கணினிவழிப் பயன்பாட்டுத் தொடர்புகொள்வதற்காகவும், பலவகைப் பணிகள் ஓசையின்றி மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


அனைத்து மொழிகளும்  ஆட்சிமொழி!
 

இந்நிலையில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து நாம் எண்ண வேண்டியுள்ளது. தமிழ் உள்ளிட்ட அனைத்துமொழிகளும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும் என்பதும் எந்த மொழியும் பிறமொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதுமே நமது அடிப்படைக் கோரிக்கை. எனவே இந்திய அரசு, இந்தியை மட்டுமே ஆட்சிமொழியாக அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படாமல், அனைத்து இந்தியமொழிகளின் வளர்ச்சிகளுக்காகவும் சமஅளவில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற முழக்கத்தை நாம் முன்வைக்கவேண்டும். அனைத்துமொழிகளும் சமம் என்ற அடிப்படையில் கணினிவழி மொழிவளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தவேண்டும். இதற்கான முன்முயற்சியைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும்; மேற்கொள்ளுமென நம்புகிறோம்.


அனைத்துப் பயன்பாட்டிலும் தாய்மொழி!


அதேவேளையில், தமிழ்நாட்டரசின் ஆட்சிமொழியான தமிழ்மொழியானது மின்-ஆளுகை, மின்-வணிகம், மின்-கல்வி போன்ற பல முனைகளிலும் மின்னணுக் கருவிகளில் பயன்படக்கூடிய மொழியாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். செல்பேசியிலிருந்து உயர்நிலைக் கணினிவரை , அனைத்து மின்னணுக்கருவிகளிலும் பயன்படுத்தக்கூடிய மின்னணு மொழியாகத் தமிழ் மலரவேண்டும்.  சொல்லாளர் மென்பொருளிலிருந்து  கணினிவழி மொழிபெயர்ப்பு மென்பொருள்வரை அனைத்து மென்பொருள்களும் தமிழுக்கு உருவாக்கப்படவேண்டும். இதற்கான ஒரு தெளிவான திட்டத்தைத் -  தமிழ்மொழி மின்னணுமயமாக்கம் என்ற தமிழுக்கான தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு வகுத்து, அதனடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.. தமிழ்நாட்டில் தமிழர்கள் அனைவரும் தங்களது அன்றாடப் பணிகள் அனைத்தையும் கணினிவழித் தமிழைப் பயன்படுத்தத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.


கோரிக்கை  மாநாடு


மேற்கூறிய நோக்கங்களின் அடிப்படையில் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் அனைவரும் ஒருங்கே கூடி, கணினித்தமிழ் வளர்ச்சிபற்றி விழிப்புணர்வைத் தமிழ்மக்களிடையே உருவாக்கவும், கணினித்தமிழ் வளர்ச்சிக்கான தெளிவான திட்டத்தை உருவாக்கவும், அதற்கான பணிகளை மேற்கொள்ளவும், தமிழ அரசின் பார்வைக்கு இவைபற்றியெல்லாம் முறையாகக் கொண்டுசெல்லவும்  கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டை 2012 திசம்பர் 15 சனிக்கிழமையன்று சென்னையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.   


இம்மாநாடு வெற்றிபெற முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

 
அன்புடன்

மாநாட்டுக் குழுவினர்

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

 

 

    

 

 

                    

Thursday, October 4, 2012

மாநாட்டுத் தேதி

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு, டிசம்பர் மாதம் 16ம் தேதி 2012, ஞாயிற்றுக்கிழமை  சென்னையில் நடைபெறவுள்ளது. இடம் -  கல்வியியல் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை.

செயற்குழுக் கூட்டம்


     செயற்குழுக் கூட்டம்
( 2012 அக்டோபர் 2) 

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு ஏற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ந. தெய்வ சுந்தரம் மாநாடு ஏற்பாடுபற்றி விளக்கினார். அதையொட்டி பல்வேறு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. திரு. இராம.கி. ஐயா, திரு, நாக. இளங்கோவன், ஊடகவியலாளர் திரு. டி.எஸ்.எஸ். மணி, தென்மொழி மா. பூங்குன்றன், திரு. கண்ணன் ,முனைவர் N. மனோகரன்,SaveTamil  அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் உட்பட 20 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கு நிதிதிரட்டல் உட்பட பல்வேறு செய்திகள் பேசப்பட்டன. 

கருத்துரைக் கூட்டம்


தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ்  - மாநாடு
( 2012 டிசம்பர் 15 )
கருத்துரைக் கூட்டம்


இன்றைய தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பு உள்ளது. எனவே கணினித்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளைத் தமிழக அரசு விரைவுபடுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி, 2012 டிசம்பர் 15 ஆம் நாளன்று ஒருநாள் மாநாடு  நடைபெற உள்ளது. மாநாட்டின் அடிப்படை நோக்கங்களைப்பற்றிய ஒரு தமிழ் விளக்க நூல் வெளியீட்டுவிழா இன்று  ( செப்டம்பர் 23 ) காலை 1030 மணிக்குக் கன்னிமாரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்குத் திரு. இராம.கி. தலைமை வகித்தார். திரு. மா. பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் மேனாள் பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ள கருத்துகளைத் தெளிவுபடுத்தினார். அதையொட்டி மாநாட்டை எவ்வாறு சிறப்புற நடத்தி, கணினித்தமிழ் வளர்ச்சிக்கான தெளிவான திட்டங்களைத் தமிழக அரசிடம் அளிக்கலாம் என்பதுபற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் இக்கலந்துரையாடலில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இறுதியில் திரு. கண்ணன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். 

                       


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India